சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்.... 


சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 7ந் தேதி தேரோட்டமும், 8ந் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது 

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன உற்சவ விழா 10 தினங்களுக்கு சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி இன்று காலை கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று முதல் தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் நகர வீதிகளில் உலா வரும்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7ந் தேதி தேரோட்டம் நடக்கிறது அன்று காலை கோயிலின் மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வரும். அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வேண்டி வடம் பிடித்து தேர் இழுப்பார்கள் அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் கோயிலின் உள்ளே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

மறுநாள் 8ந் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பின்னர் மதியம் 2 மணி அளவில் நடராஜரும் சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து  அருள் பாலிப்பர். பின்னர் நடராஜர் சித்சபா பிரவேசமான    கருவறைக்கு கொண்டு செல்லப்படும். பிரசித்தி பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.



Leave a Comment