தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சில சிவன் கோயில்கள்! 


தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். 

சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம். 

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது. 

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. 


திருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. 

திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். 

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்கி உள்ளார். 

தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. 

திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும். 

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். 

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். 

சென்னை சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். 

சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 


கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. 

ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். 
 



Leave a Comment