திருச்செந்தூர் ஸ்ரீ செந்திலாண்டவர் சிறப்புகள்


சகல வாஸ்து லட்சணங்களுடனும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செந்திலாண்டவன் ஆலயம் திருச்செந்தூரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘புட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.

ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.

கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை உணர்த்தவே!

முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

 இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.

மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.

உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராக செந்திலாண்டவர் காட்சி தருகிறார்.

ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.
 



Leave a Comment