முத்து கவச அலங்காரத்தில் திருப்பதி ஏழுமலையான்.....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகத்தில் முத்து கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மலையப்ப சுவாமி .
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான இன்று கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் 11 மணியில் இருந்து 2 மணிவரையிலும், மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரையிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்து, சகஸ்ர தீபலங்கார சேவை மண்டபத்தில் வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் முத்துக்கவசத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாளையொட்டி கோவிலில் இன்று வசந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான நாளை ஞாயிறன்று உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. இந்த தங்க கவசம் அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட உள்ளது.
Leave a Comment