பிரமோற்சவம்.... தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா....
புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பிரமோற்சவத்தையொட்டி விடிய, விடிய நடைபெற்ற தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இக்கோயிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி அபய ஹஸ்த முத்திரையுடன் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்துவருகிறார் . சனி தோஷம் நீங்க வேண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர் .
புகழ்பெற்ற இக்கோயிலின் வைகாசி விசாக ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அதே மாதம் 29ஆம் தேதி பிரம்மோற்சவத்திற்கான கொடி ஏற்றப்பட்டது. 06.06. 2019 அன்று செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 7 ஆம் தேதி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய செண்பக தியாகராஜ சுவாமி யதாஸ்தானத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பத்தாம் தேதி அன்று பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதி உலா நடைபெற்று முடிந்தது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12 ம் தேதி அன்று நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காணக் கிடைக்க கூடிய அரிய நிகழ்ச்சியான தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நேற்று (13ம் ஆம் தேதி ) இரவு நடைபெற்றது. சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது . இதை தொடர்ந்து வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment