கருட தரிசனமும், அதன் பலன்களும்
ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி, எனப் பலபெயர்கள் உண்டு.
கச்சபர்-விநதை தம்பதிக்கு ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார் கருடன். இவருடைய அண்ணன் அருணன். இரண்டாவதாகப் பிறந்த கருடாழ்வார் மகாபலமும், சர்ப்பங்களை விழுங்கும் சக்தியும், அழகான முகமும், குவிந்த இறகுகளையும், உறுதியான நகங்களையும், சிறந்த கூர்மையான கண்களையும், பருத்த கழுத்தையும், குட்டையான கால்களையும், பெரிய தலையையும், உடையவன்.
எல்லா திசைகளிலும் வேகமாகப் பறக்கும் ஆற்றலைப் பெற்றவன். கருடனுக்கு ருத்ரை, சுகீர்த்தி என இரு மனைவிகள் உண்டு. மாற்றாந்தாயான கத்ருவிடம் அடிமைப்பட்டிருந்த தன் தாய் விநதையின் அடிமைத்தனத்தை, இந்திரலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டுவந்து போக்கினான் கருடன்.
கருட வாகனமும் கருடக் கொடியும்:
ஒரு சமயம் கருடன் இந்திரனுடன் போரிட்டபோது, திருமால் உபேந்திரனாக இருந்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். திருமால் கருடனின் கர்வத்தை அடக்கி, தனக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வரமளித்தார்.
கருட தரிசனப்பலன்:
கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நன்மையைத் தரும். பலன்களும் கிடைக்கும். அவை,
ஞாயிறு நோய் நீங்கும்.
திங்கள், செவ்வாய் - அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.
புதன், வியாழன் - பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.
வெள்ளி, சனி -ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.
அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம். கருட தரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டுமென்று கூறப்படுகிறது.
Leave a Comment