மரங்களை வெட்டினால் மரண தண்டனை தந்த தமிழர்கள்
உலகின் முதன்மை மொழி, இலக்கணம் வகுக்கப்பட்ட மொழி, வாழ்வியலை செம்மைப்படுத்திக் கட்டமைத்த மொழி தமிழ். தமிழர்களின் கட்டுமான மற்றும் அடையாளச் சின்னங்களாக இன்றும் நிலைத்து நிற்பவை கற்களால் கட்டப்பட்ட கோவில்கள். இக்கோவில்கள் என்பவை வெறுமனே வழிபாட்டு மையங்களாக இல்லாமல், பாடல், ஆடல், இசைக் கலைக்கான அரங்கங்களாகவும், ஓவியம், சிற்பம் ஆகியவற்றுக்கான ஒரு கண்காட்சியாகவும் விளங்கியிருக்கின்றன. இயற்கைச் சீற்றங்களின்போது மக்களைக் காக்கும் அரணாகவும், கோபுரக் கலசங்களில் தானியங்களைப் பராமரித்ததன் அடிப்படையில் வேளாண்மைக்கு உதவியதாகவும் எனப் பலப் பயன்பாடுகள் கோவில்களில் இருந்துள்ளன.
கோவில்களைச் சுற்றியுள்ள வேளாண் நிலம், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களின் பல்வேறு காய் கனிகளின் வளர் தோட்டங்களாகவும் இருந்திருக்கின்றன. கோவிலுக்கு முன்னர் வெட்டப்பட்ட குளம் நீர்தேக்கும் நீர் ஆதாரமாக விளங்கியிருக்கிறது.
இதேபோல, மக்கள் உடல்நலன் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கும் பொது இடமாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக துளசி தீர்த்தம் அளிக்கப்படும் கோவில் பகுதிகளில் காய்ச்சல், சளித் தொல்லை குறைவாக இருப்பதையும், தொற்று வியாதிகள் சில தொற்றாததையும் கடந்த காலங்களில் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
அந்த வகையில் கோவில்கள் தமிழர்கள் நூலகங்களாகவும் செயல்பட்டுள்ள என்கிறார் தஞ்சை சரசுவதி மகால் தமிழ்ப் பண்டிதரும், சுவடிகள், கல்வெட்டுகள் மற்றும் கோவில்கள் ஆய்வறிருமான முனைவர். மணிமாறன்.
பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளை, தென்புலத்தார், ஐயை உலகத் தமிழ் மகளிர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னையில் ஓலைச்சுவடியியல் மற்றும் தமிழ்த் தொன்ம ஆய்வியல் பயிலரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சூன் 7 மற்றும் 8 ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் பயிற்சி அளிப்பதற்காக, முனைவர்.மணி.மாறன், பள்ளித்தலைமை ஆசிரியை திருமதி.கோ.ஜெயலட்சுமி, சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் தாமரைப்பாண்டியன், அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தி, கடல்சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வளார் ஒரிஸா பாலு ஆகியோர் பயிலரங்கில் பங்கு பெற்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களைச் சேந்தவர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் சுவடிகள் பற்றிய அடிப்படை, கிரந்த எழுத்து முறைகள், சுவடிகளில் நாட்டுப்புற வாழ்வியல், சுவடிகள் படிக்கும் முறை, பாதுகாக்கும் முறை உள்ளிட்ட அடிப்படையான பல ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன, பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
பயிலரங்கில் ஆய்வுரை மற்றும் பயிற்சி அளித்த முனைவர் மணி.மாறன் பேசும்போது, தமிழர்களின் கோவில்கள் வெறும் கட்டடக்கலைக்கான சான்றுகளாக மட்டுமே நிற்கவில்லை, அவை தமிழர்களின் வாழ்வியல் சான்றாக நிற்கின்றன என்று கூறினார். தமிழக கோவில்களில் நூலகங்கள் செயல்பட்டன என்று குறிப்பிட்ட அவர், தமிழர்கள் முழுமையான முற்போக்கு அறிவு பெற்றவர்களாகவே இருந்துள்ளனர் என்று கூறினார். சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தமிழ் மன்னர்கள் என்று குறிப்பிட்ட அவர் மரங்களை வெட்டியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட தகவல்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பயிற்சி அளித்த தஞ்சை பாபநாசம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையும், சுவடியியல் ஆய்வாளருமான கோ. ஜெயலட்சுமி, கிரந்த எழுத்துக்கள் என்பவற்றை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் அல்ல, தமிழர்களே என்று உறதிபடக்கூறினார். சமஸ்கிருதத்தைப் படிக்கப் பயன்டுத்தவேண்டிய நிலை வந்தபோது தமிழ் முழுமையாகச் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக, சமஸ்கிருதத்தைப் படிப்பதற்காகவே தமிழர்களால் உருவாக்கப்பட்ட மொழி வடிவமே கிரந்த மொழி வடிவம் என்று தரவுகளோடு எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய, சென்னைத் தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் மற்றும் தமிழிலக்கியத் துறை உதவிப்பேராசிரியர் தாமரைப்பாண்டியன், தமிழர்கள் வணங்கும் குல தெய்வம் என்பர்கள் அனைவருமே பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும், கொலை செய்த தரப்பினரும் அதே கடவுளை வணங்குகின்றனர், கொலை செய்த தரப்பினரும் அதே கடவுளை வணங்குகிறார்கள் என்று ஒவ்வொரு குல தெய்வத்தின் பின்னணி வரலாற்றையும் விளக்கினார். மேலும், முருகனுக்கு ஒரே மனைவிதான் என்று குறிப்பிட்ட தாமரைப்பாண்டியன், தெய்வயானை என்பதெல்லாம் பின்னர் திணிக்கப்பட்ட கற்பனைக் கதை என்று கூறினார்.
பயிலரங்கில் பேசிய கடல்சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிஸா பாலு, தமிழர்களின் கடல்சார் அறிவியல் உலகின் தலைசிறந்த அறிவு என்று கூறினார். உலகின் 190 நாடுகளில் தமிழர்களின் வேர்கள் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக்கூறிய அவர் ஓலைச் சுவடிகளில் தமிழர்களின் கடல்கடந்த வணிகம் பற்றிய பல குறிப்புகள் இருக்கவேண்டும் என்றும் அதுபற்றி முழுமையாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
தொன்ம ஆய்வுகள் எப்படிச் செய்யப்படவேண்டும் என்று உரையாற்றிய அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தி, ஆய்வாளர்கள் ஒரு இலக்கை நோக்கி குறித்த ஆய்வுமேற்கொள்ளாமல் பரந்து பட்ட விரிவான, எதையும் விவாதத்திற்குள்ளாக்கி முடிவுக்கு வரும்வகையில் உறுதியாகவும், தெளிவாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என்றார். யாரோ சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆய்ந்தறிந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, பயிலரங்கை சென்னை எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். அரங்கமல்லிகா தொடங்கி வைத்து உரையாற்றியதுடன், மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் வழங்கினார். பயிலரங்கின் சிறப்பு விருந்தினர்களாக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து ஐயை மகளிர் குழுவைச் சேர்ந்த திருமகள், போதிதர்மர் அறக்கட்டளை இயக்குநர் உமா பாலு, பத்திரிகையாளர் பா.ஏகலைவன், விழுப்புரம் ஐயை இஸ்மத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விஷ்வா விஷ்வநாத், இதழியலாளர்
Leave a Comment