தியானமென்றால் என்ன?
பதஞ்சலி முனிவரின் கருத்துப்படி “குறித்த ஒரு பொருளின் மீது மனத்தினை நிறுத்திவைக்கும் நிலையில் சிறிது நேரம் நிலைத்திருத்தல்” தியானம் எனப்படும்.
பலர் தாம் தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டு தாரணையே செய்கின்றனர். இது தியானத்தின் முதற்படியாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் மனம் அசைவற்று நிறுத்தப்படுகின்றது. அசைவற்று நிற்கும் மனம் அப்படியே நிலைத்து நிற்கும் போது தியானமாக மாறுகின்றது. இதனையே பதஞ்சலி முனிவர் “தத்ர ப்ரத்யயைகதானத த்யானம்” என யோகசூத்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
மனம் தான் வேறு நினைக்கின்ற பொருள்வேறு, என்றில்லாமல் அதுவாகவே அது மாறுதல் தியானத்தின் ஆரம்பம் உதாரணம், தாமரைப்பூவை நினைத்துத் தியானம் செய்பவர் தானே தாமரை மலராகி அதன் மணம், குணம் போன்ற அனைத்துத் தன்மைகளையும் அறிந்தவராவார். மனத்திற்கு அப்பாற்பட்டது தியானம்.
தியானம் ஆரம்பத்தில் மனதின் செயற்பாடாக இருந்த போதிலும் இறுதியில் அதன் செயற்பாடு அற்றுப் போகின்றது.
தியானம் செய்பவர் தன்னை மறந்தவராகின்றார். இது தூக்க நிலைபோன்று இருக்கும். ஆனால் வழமையான நித்திரைக்கும் தியானத்திற்கும் வேறுபாடு உண்டு. நித்திரை சாதாரண உணர்வு நிலை, தியானமோ உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலை. அதாவது மனதைக் கடந்து உணர்வு பிரிந்து உள்முகப்படும் நிலை. இந்நிலையில் புதுவித அனுபவங்களையும் இன்பங்களையும் பெறலாம்.
தியானத்தில் ஈடுபடும் ஒருவர் கவனத்தில் எடுக்க வேண்டியவை.,,,
முடிந்தவரை தனி அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல் வேண்டும். அறையில் முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், தேவர்கள் முதலியோரின் படங்கள் தொங்கவிடப்படலாம். சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி மலர்களால் அலங்கரித்து அறையைத் தூய்மையுடையதாகவும், வாசனையுடையதாகவும் வைத்துக்கொள்ளலாம்.
கோபம், பயம், தீய எண்ணங்கள் அற்று நல்ல எண்ணங்களுடன் அறையில் நுழைதல், தீயவர்களை அறையினுள் அழைத்துச் செல்லாதிருத்தல், அறையினுள் விதண்டா வாதம் பேசுதல், நித்திரை செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
Leave a Comment