நரசிம்ம அவதாரம் பற்றி சில தகவல்கள்....
ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் இரணிய வதை படலம் ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்க கோவிலில் சிங்கமுக மண்டபம் அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.
நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.
நரசிம்மர் பல நாமங்களில் அர்ச்சிக்கப்படுகின்றார். இரணி யனுக்கு முன்பு தோன்றியபோது வக்ர நரசிம்மராகவும், இரணி யனுடன் போர் செய்தபோது வீர நரசிம்மராகவும் , போர் முடிந்து சாந்த நிலையை பெற்ற போது சாந்த நரசிம்மராகவும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அருள் பாலித்த போது ஸ்ரீலட்சுமி நரசிம்மராகவும் யோக நிலையில் அமர்ந்தபோது யோக நரசிம்மர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார்.
ஸ்ரீநரசிம்மர் பெரும்பாலும் மலை உச்சியிலும், குகை பகுதியிலுமே அவதரித்து உள்ளார். ஆலயங்களும் அப்பகுதியிலேயே கட்டப்பட்டு உள்ளன.
சப்த ரிஷிகளுக்கு தனது யோக நிலையை காண்பித்த தலமே திருக்கடிகை என அழைக்கப்படும் சோளிங்கர்.
நாமக்கல் நரசிம்மர் சக்திவாய்ந்தது. இவ்விடத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.
சென்னை அருகே சிங்க பெருமாள் கோவில் தலத்தில் நரசிம்மர் சாலகிராம கல்மலையுடன் விரலிலும், மார்பிலும் ரத்த கறை போன்ற சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றார்.
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள நரசிம் மரும், விசாகப்பட்டினம் அருகே ஸ்ரீசிம்மாசலம் என்ற மலை மீது அவதரித்து உள்ள நரசிம்மரும் சக்தி மிக்கவர்கள்.
கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.
Leave a Comment