நெல்லை கைலாசநாதர் கோயிலில் ஜூன் 10-ல் வைகாசி தேரோட்டம்
நெல்லை கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் ஜூன் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கைலாசநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டதும், கொடிமரத்திற்கு பதினாறுவகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜைகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பூங்கோயில், சப்பரங்களில் மலர் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
7-ம் திருநாளான இம் மாதம் 8-ம் தேதி இரவு 9 மணிக்கு செப்புச் சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சிவப்பு சாத்தி திருவீதியுலா வர உள்ளார். 9-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி வீதியுலா வருகிறார். மாலையில் சந்திரசேகரர் பரிவேட்டையும், கங்காளநாதர் வீதியுலாவும் நடைபெற உள்ளன.
விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகளும், 7 மணிக்கு சுவாமி-அம்பளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர், மலர் அலங்காரத்துடன் தேருக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருள்கின்றனர். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 11ஆம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும், 10.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளன.
Leave a Comment