சித்தர்கள் வாழ்ந்த செக்கர் கிரி மலை


தோவாளையில் மூலிகைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்ந்த மலை தான் செக்கர் கிரி. இந்த மலையில் தான் சுப்பிரமணிய சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் முருகபெருமான் அமைந்திருக்கும் கருவரை பாறை குகைக்குள் அமைக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் இருந்தும் சித்தர்கள் மலையில் தங்கி சுவாமிக்கு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கான சான்றுகள் உள்ளது. கோவிலில் லாடசுவாமி என்ற சித்தரின் சிலை உள்ளது. இதில் அவர் ஜடாமுடியுடன், கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் உத்திராட்சை மாலைகளுடனும் காட்சியளிக்கிறார். 

மலைக்கோவிலில் பால் கிணறு ஒன்று உள்ளது. இதில் உள்ள தண்ணீர் பால் போன்று சுவையாக இருக்குமாம். எந்த கோடையிலும் கிணறு வற்றியது கிடையாதாம். ஆகவே பக்தர்கள் கிணற்று தண்ணீரை தீர்த்தமாக கருதி அருந்துகின்றனர். நோய் வாய்பட்டவர்கள் அருந்தினால் நோய் தீர்ந்து விடுவதாக கூறப்படுகிறது. இதே போல் கோவிலில் கஞ்சி வழங்குவது விஷேசமாக கூறப்படுகிறது. 

பிரசாத கஞ்சியை அருந்துகின்ற கர்ப்பிணிகளுக்கு பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறதாம். சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு சற்று மேற்பகுதியில் ஒரு பாறை குகையில் ராமர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. கோவிலுக்கு முன் பகுதியில் ஆவுடையம்மாள் சன்னதிக்கு முன்பாக காளி கோவில் உள்ளது. செக்கர்கரி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி மற்றும் சூரசம்கார விழா, வைகாசி விசாக விழா, மலர் முழுக்கு விழா, மாசி விழா நடக்கிறது.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அன்னதானமான கஞ்சி பிரசாதம் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சுற்றுலா வருகின்றவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து செல்கின்றனர். 



Leave a Comment