கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா
சிதம்பரம் அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. பழனியைச் சேர்ந்த திருநங்கை தேன்மொழி மிஸ் கொத்தட்டையாக தேர்வு செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் வழக்கமாக வைகாசி மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் பங்கேற்கும் திருநங்கைகள் ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
ஆனால் இந்த ஆண்டு முதன் முறையாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா சற்று வித்தியாசமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 40 ஆண்டுகளில் முதன் முறையாக திருநங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற திருநங்கைகள் சிலர் நாட்டுப்புறப் பாடல்களை பாடினார். இதில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. பிரபல திரைப்பட நடிகை ரேகா இந்நிகழ்ச்சியில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். பின்னர் திருநங்கைகளுக்கான மிஸ் கொத்தட்டை அழகிப் போட்டி நடந்தது. இதில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். அப்போது திருநங்கைகள் ஒவ்வொருவரும் ஒய்யாரமாக, நளினமாக நடந்து வந்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இதையடுத்து போட்டியின் முடிவில் நடுவர் குழுவினர் மிஸ் கொத்தட்டையை தேர்வு செய்தனர். அப்போது அவர் திருநங்கைகளுக்கான பரிசுகளை அறிவித்தனர்.
பழனியைச் சேர்ந்த திருநங்கை தேன்மொழி மிஸ் கொத்தட்டையாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் திருநங்கை அழகிக்கான முதல் பரிசையும் இவர் தட்டிச் சென்றார். நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த ரஃபியா இரண்டாவது இடத்தையும், தஞ்சாவூரைச் சேர்ந்த சந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற திருநங்கைகளுக்கு விழாக்குழுவினர் சார்பில் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் பரிசுகளை வழங்கினர்.
Leave a Comment