பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யான வைபவம்
பொன்னேரி அருகே பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிவபெருமான், பார்வதி தாயார் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அகத்திய மகரிஷிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவின் முதல் நிகழ்வாக மாலை மாற்றுதலும் ஒய்யாளி சேவையும் நடந்தேறியது.
இதனை தொடர்ந்து சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் ஓத மேளதாளம் முழங்க சிவபெருமான் பார்வதி தேவி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து மாமுனி அகத்திய மகரிஷிக்கும் லோபமுத்ராதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்தேறியது. திருக்கல்யாணம் முடிவுற்றதும் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் அகத்திய மகரிஷிக்கு காட்சியளித்தது சிறப்பம்சமாக அமைந்தது.
திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு மண விருந்து வழங்கப்பட்டது. வைகாசி விசாகத்தன்று சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடத்தப்படும் திருக்கல்யாணத்தை மாமுனி அகத்திய மகரிஷி நேரில் கண்டு மகிழ்வதாகவும் இத்திருக்கல்யாணத்தை காணும் பக்தர்களின் வாழ்வில் அமைதியும் வளமும் நிரம்பி நிற்கும் எனவும் சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்
Leave a Comment