முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம்
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள்.
வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம் பிக்கை.
வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
Leave a Comment