பத்மாவதி பரிணய உற்சவம் ..... குதிரை வாகனத்தில் மலையப்பர்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாளான இன்று மாலை குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் எழுந்தருளினார். பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட திருக்கல்யாண வைபவத்தை தேவஸ்தானம் திருமலையில், 3 நாள்கள் பரிணய உற்சவமாக நடத்தி வருகிறது.

அதன்படி, திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் நேற்று திங்கட்கிழமை  விமரிசையாக தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான இன்று  மாலை உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தங்கப் பல்லக்கில் பரினய மண்டபத்திற்கு  ( கல்யாண மண்டபத்துக்கு ) எழுந்தருளினர். 

அதன்பின், அவர்களுக்கு திருமலை ஜீயர்கள் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து, தீப தூப ஆராதனை செய்து, அவர்கள் இருவரையும் ஊஞ்சலில் அமர வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தினர். பின்னர், இரவு மீண்டும் உற்சவ மூர்த்திகள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இதில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான இணை செயல் அலுவலர் லட்சுமிகாந்தம், துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் மற்றும் அதிகாரிகளும், அர்ச்சகர்களும், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.



Leave a Comment