கொடைக்கானலுக்கு வந்த குறிஞ்சியாண்டவர்


மலைகளும், மேகங்களுமாக குளிரும் மழையுமாக பசுமை படர்ந்திருக்கிறது கொடைக்கானல்.

கொதிக்கும் கதிரவனின் அனலில் இருந்து தப்பிக்க கோடை வாசஸ்தலங்களை நாடும் மக்களின் விருப்பத்திற்குரிய இடமாக இருக்கிறது கொடைக்கானல். இயற்கையின் கொடையை கானகமாக கொண்டிருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில் மலைகளின் வாசம்மிக்க இடத்தில் குன்றுதோறும் குடியிருக்கும் முருகன் இல்லாமல் எப்படி?

இயற்கையின் கடவுளாக, தமிழ் கடவுளாக நாடி வருவோரை தன் புன்னகையால் வரவேற்கும் ஆதி கடவுளாக குறிஞ்சியாண்டவர் குடியிருக்கிறார் கொடைக்கானலில்.

இந்த கோயில் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. இது முருகப் பெருமானின் பரம பக்தையால் உருவான கோயில்.

அவர் இந்தியர் அல்ல என்பது இன்னொரு சுவாரஸ்யம். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். அவரது பெயர் லீலாவதி.  பழனி பாலதண்டாயுதபாணியின் அதிதீவிர பக்தை. பழனி முருகனை தரிசிப்பதற்காகவே 1934ஆம் ஆண்டு இந்தியா வந்த லீலாவதி, கொடைக்கானலில் தங்கியிருந்தார். அவரது தினசரி பொழுதுகள் தூரத்தே தெரியும் பழனி முருகன் கோயிலை நோக்கியே விடிந்தது. அங்கிருந்தபடியே தினமும் தரிசித்துக் கொண்டிருந்ததை அவரது கணவரும், சிவபக்தருமான ராமநாதனும் தடுக்கவில்லை.

மேகங்கள் கொஞ்சி விளையாடி பழனி முருகனை தரிசிப்பதைப்போல, லீலாவதியும் அவரது மனதால் பழனி முருகனை பரவசத்தோடு தரிசிப்பார். ஆனால் காலம் எப்போதும்போல இருப்பதில்லையே. பருவம் மாறியபோது அதிக மேகங்கள் கூடி பழனி மலையை மறைத்துவிட்டன.

தவித்துப்போனார் லீலாவதி, கண்ணீர் வடித்தார். கதறுகிறார். முருகா என்மேல் என்ன பிழை கண்டு உன் தரிசனத்தை மறுக்கிறாய்? அப்பனே, உன்னைக் காணாமல் எப்படி இந்த நாளை போக்குவேன். நீ குடியிருக்கும் மலையை பார்க்காமல் எப்படி நான் இருப்பேன் என்று தவிக்கிறார்.

அழுது தேம்பியபடியே கண்ணயர்ந்த லீலாவதியின் கனவில் வந்த முருகன், ஏன் இவ்வளவு வேதனை படற? உனக்காக நானே இங்கு வர்றேன். எனக்காக இந்த கொடைக்கானலிலேயே கோயில் எழுப்பேன் என்கிறார். திடுக்கிட்டு எழுந்த  லீலாவதி பரவசத்தோடு தனது கணவரிடம் கூறுகிறார். மனைவியின் விருப்பத்திற்கேற்ப, ராமநாதன் எழுப்பிய கோயில்தான் குறிஞ்சியாண்டவர் கோயில்.

மனைவியின் பக்திக்கு உதவி கோயில் கட்டியவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ராமநாதன் கல்லூரி நிறுவனர் சர் பொன்னம்பல ராமநாதன்.

1936ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டப்பட்டது. பக்தையின் பக்திக்கு முருகன் செவிமடுத்த திருத்தலம். அதனாலே என்னவோ புன்னகை தவழும் இதழ்களோடு ராஜ அலங்காரத்தில் கண்கொள்ளாமல் காட்சியளிக்கிறார் இந்த குறிஞ்சியாண்டவர்.

ஒருமுறை பார்த்தால் போதுமா? பிரகாரம் சுற்றி விட்டு மீண்டும் வந்து பார்க்கிறோம். போதவில்லை. அப்படி ஒரு அழகன். முருகன் என்றாலே அழகுதான். இந்த குறிஞ்சியாண்டவர் கோலத்தில் அவன் ஒரு பேரழகன்.

கோயிலில் மகாவிஷ்ணுவும், பிள்ளையாரும் தனி பிரகாரங்களில் இருக்கிறார்கள்.

கொடைக்கானல் மையப்பகுதியில் இருந்து ஒருசில கிலோமீட்டர்களில் அமைந்துள்ள இந்த  குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வருவோர் மறக்காமல் கோயில் அருகே நின்று பாருங்கள். தூரத்தே பழனி பாலதண்டாயுதபாணி குடியிருக்கும் மலையை தரிசிக்கலாம். இங்கிருந்து பார்க்கும்போது  மனதில் ஒலிப்பது அரோகரா.. பழனி முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமும்தான்.

அரோகரா…

- எழுத்தாளர் பாமா



Leave a Comment