நடராஜ பெருமான் தாண்டவமாடிய திருத்தலங்கள்!
மகாலட்சுமியின் தவத்திற்கு இணங்கி நடராஜப் பெருமான் ஆடிய லட்சுமி தாண்டவ திருக்கோலத்தை திருப்பத்தூர் மாவட்டம் திருத்தளியில் தரிசிக்கலாம். ஸ்ரீ பத்துக் கரங்களுடன், இடது காலை ஊன்றி வலது உள்ளங்கால் தெரியும்படி அகத்தியருக்காக ஆனந்த தாண்டவமாடிடும் நடராஜரை நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள கீழ்வேளூரில் காணலாம்.
திருவாரூரில், திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கேற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. இவர் வீதிவிடங்கர் என்றும் இருந்தாடழகர் என்றும் போற்றப்படுகிறார்.
பழநிக்கு அருகே கொழுமம் கோயிலில் ‘நித்தம் நின்றாடுவார்’ எனும் திருப்பெயரில் அக்னி பகவானுக்கு அருளிய நடராஜமூர்த்தியை தரிசிக்கலாம்.
திருவாரூருக்கு அருகே உள்ள திருக்காறாயிலில் நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனமாடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்றும் ஆடும் நடனவகை இது.
நாகப்பட்டினத்தில் சுந்தரவிடங்கர் ஆடுவது, பாராவாரதரங்க நடனம். பாராவாரம் எனில் கடல்; தரங்கம் எனில் அலைகள். கடலலை போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடும் நடனம் இது.
திருநள்ளாறு கோயிலில் நாகவிடங்கர் ஆடும் நடனம்& உன்மத்த நடனம். பெருமான் பித்தனைப் போல் சுழன்றாடுவதால் இந்தப் பெயர்.
திருவாரூர், கச்சனத்திற்கு அருகே உள்ள திருக்குவளையில் அவனி விடங்கர், பிருங்கி நடனம் ஆடுகிறார். பிருங்கி எனில் வண்டு. வண்டு பூவைச் சுற்றிப் பறந்து, உயர்ந்து, தாழ்ந்து, பின் பூவில் அமர்வது போன்ற நடனம் இது.
நாகை, வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம். அன்னப்பறவை அடி மேல் அடிவைத்து எழிலாக நடப்பது போலிருக்கும்.
திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம், கமல நடனம் ஆகும். ஈசன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடுதுறைக்கு அருகே திருக்கடையூரில் தரிசிக்கலாம். கஜ சம்ஹாரத்துக்குப் பின் பிட்சாடன வடிவில் ஈசன் கஜசம்ஹார நடனம் ஆடினார். இத்திரு வடிவம், மன்னர்குடி, வழுவூரில்‘கரியுரி போர்த்த கடவுளா’க வணங்கப்படுகிறது.
காளியின் கர்வத்தை அடக்க ஈசன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை சென்னை, திருவள்ளூர் அருகே திருவாலங்காட்டில் தரிசிக் கலாம்.
வாசுகி பாம்பிற்காக ஈசன் ஆடியது, வாசுகி அனுக்ரஹ நடனம். இவரை கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயத்தில் ஓவியமாகக் காணலாம்.
சிதம்பரத்தை அடுத்துள்ள ஓமாம்புலியூரில் வியாக்ரபாத முனிவருக்காக நடனமாடினார் நடராஜர். இங்குதட்சிணாமூர்த்தியும் நடராஜரும் இடம் மாறி வீற்றிருப்பது சிறப்பு.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியுள்ள சிற்சபை, அதற்கு முன் உள்ள மகாமண்டபம் கனகசபை, இரண்டாம் பிராகாரத்தில் தேர் வடிவ நிருத்தசபை, உற்சவமூர்த்தங்கள் உள்ள தேவசபை, ஆயிரங்கால் மண்டபம் உள்ள ராஜசபை என்று பஞ்ச சபைகள் உள்ளன.
ஈசன் பார்வதிக்கு ஆடிக் காட்டிய கௌரி தாண்டவத்தை திருவடிவை மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
காளி தேவிக்காக ஈசன் ஆடியது காப்புத் திருநடனம் (ரட்சா தாண்டவம்). சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள கூவம் கோயிலில் பத்தாம் நாள் திருவிழாவின் போது இந்த நடனத்தை தரிசிக்கலாம்.
சிதம்பரம் அருகிலுள்ள கூடலையாற்றூரில், ஈசன் பிரம்மனுக்கு தாண்டவ தரிசனத்தை தந்தருளியதால் நர்த்தனவல்லபேசர் என வணங்கப்படுகிறார்.
ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சித்ரா பௌர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக ஈசன் ஆடிய நடனம், சித்திர நடனம் எனப்படுகிறது.
Leave a Comment