திருப்பதி சென்றால் அவசியம் இங்கும் வரவேண்டும்


திருப்பதிக்கு செல்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்தால்தான் திருப்பதி சென்றுவந்த பலன் கிடைக்கும். அது எந்த கோயில் என்று தெரியுமா?

இலங்கையில் நடந்த  போரின் போது லட்சுமணன் மயங்கி விழ, சஞ்சீவினி மூலிகைக்காக சஞ்சீவிமலையை எடுத்து வந்த அனுமன், ஓரிடத்தில் அமர்ந்து கைமாற்றிவைத்து எடுத்துச் சென்ற இடம் எதுவென்று தெரியுமா?

அதுதான் மலையை கீழே வையாத ஊரான திருமலைவையாவூர். சென்னையை கடந்து மதுராந்தகம் செல்லும் முன்பாக படாளம் கூட்டுரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் சாலையில் ஒருமலை தெரியும். அங்குதான் வீற்றிருக்கிறார் பிரசன்ன வெங்கடேசபெருமாள். மலையேறிச் செல்லபடிக்கட்டுகள் இருக்கின்றன. கார்கள், வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் இருக்கிறது.

இங்குமூர்த்தி, ஆதிவராகப் பெருமாள். திருப்பதி கோயிலைப் போல ஆதிவராகர் சன்னதிக்குப் பிறகு தான் பிரசன்ன வெங்கடேசபெருமாள்.
மலையேறிச் சென்றதும் முதலில் தென்படுவது கம்பீரமான கோயில் கொடிமரம் அதனைக் கடந்து சென்றதும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதி. அலர் மேலமங்கை தாயார் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் இருக்கிறது. 

மனதார வழிபட்டு வெளியே வந்ததும் அடுத்துள்ளது சக்கரத்தாழ்வாருக்கு தனிசன்னதி. அங்கு விமான தரிசனம் செய்ய வேண்டியது அவசியம். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி போல இருப்பது இக்கோயிலின் சிறப்பு.

திருப்பதி திருக்கோயிலை கட்டிய அபராஜிதவர்ம பல்லவமன்னன் வேண்டியவாறு குதிரைகள் பூட்டிய ரதத்தில் காட்சியளித்ததால் பிரசன்ன வெங்கடேசராக அழைக்கப்படுகிறார்.

சுவாமி குதிரை பூட்டிய ரதத்தில் காட்சியளித்ததன் அடையாளம், குதிரை குளம்பின் அடையாளத்துடன் கோயிலின் வெளியே காணப்படுவதை இன்றும் காணலாம்.

முகூர்த்த நாட்களில் இக்கோயிலில் கல்யாணங்கள் நடப்பதை அதிகம் பார்க்கலாம்.

திருப்பதிக்கு சென்றுவந்தவர்கள் இந்த கோயிலில் வந்து பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபட்டால்தான், திருப்பதி சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பதால், திருப்பதி செல்பவர்கள் தவறாமல் வரவேண்டியதலமும் கூட. 


ஒருமுறை வந்து பாருங்கள். பிரசன்ன வெங்கடேச பெருமாள், வாழ்க்கையை பிரகாசமாக்குவதை கண்கூடாகஉணர்வீர்கள். 


ஓம்நமோநாராயணாய

-    எழுத்தாளர் பாமா



Leave a Comment