ராமானுஜருக்கு தீக்ஷை அளித்த ஏரிக் காத்த ராமர்....
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் மாவட்டமாக பெயர் பெற்றது. அவற்றில் மிகப்பெரிய ஏரி என்றால் அதுமதுராந்தகம்ஏரிதான். சின்ன கடல் போல மழைக்காலங்களில் ததும்பி நிற்பதை பார்க்கவும், கலங்கல் நிறைந்து வழிந்தோடுவதை பார்க்கவும் வண்டிகட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக வருவார்கள். அந்த காலத்தில் தண்ணீர் பெருகி கிளியாற்றில் ஓடுவதை காண்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக இருந்தது.
அப்படி ஒரு காலம். 1825ஆம்ஆண்டு ஏரி மழையில் நிறைந்து ததும்புகிறது. தண்ணீரின் வேகத்திற்கு கரைகள் ஈடுகொடுக்கவில்லை. எத்தனை முறை அடைத்தாலும் கரைஒருபக்கம் உடைந்துகொண்டே இருக்கிறது. அப்போது கிழக்கிந்திய அதிகாரி லயனல் பிளேஸ் பொறுப்பில் இருக்கிறார். கரை உடைபடுவதை தடுக்க வழி தேடி அவர் தவித்தபோது, ஒருவர் சொல்கிறார். இங்குள்ள கோதண்டராமர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பாழ்பட்டு இருக்கும் ஜனகவல்லி தாயார் சன்னதியை சரிசெய்து கொடுப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள் என்கிறார். அவரை எள்ளி நகையாடி அனுப்பிவிட்டாலும் லயனல் பிளேசுக்கு உள்ளூர ஒரு நப்பாசை. வேண்டிக்கொள்கிறார்.
வேண்டிக்கொண்ட நாளில் இடி, மின்னல், மழை..மனம் பதைக்கிறது. ஏரி உடைந்தால் மதுராந்தகம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் மூழ்கிவிடும். எத்தனை உயிர் போகுமோ? நினைக்கவே பதறியது. குதிரையில் ஏறி கிளம்புகிறார். மழை கொஞ்சம் கூட விடுவதாக இல்லை. பதற்றத்தோடு கரையை நெருங்குகிறார். தூரத்தில் கரையோரம் இரண்டு பேர் நின்றிருக்கிறார்கள். நல்ல உயரம்.. கருநிற வைரமாய் ஜொலிக்கும் ஒருவரின் கைகளில் வில் ஏந்தி நிற்கிறார்,பக்கத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மற்றொருவரும் வில்லேந்தி நிற்கிறார். இருவரும் கரையோரம் நடக்கிறார்கள். லயனல் பிளேசுக்கு பதற்றம் உண்டாகிறது. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றிருக்கும் கரை மேல் நிற்கிறார்களே. அருகில் போக நினைக்கிறார். போக முடியவில்லை. ஒரு ஒளிப்பிழம்பாக அவர்கள் இருவரும் கரையில் நடந்தபடியே இருக்கிறார்கள்.
விடிகிறது. அத்தனை மழைக்கும் கரை உடையவில்லை. லயனல் பிளேஸ் ஆச்சரியத்தில் உறைகிறார். வந்தது இதோ இந்த ஏரி காத்த ராமரும் லட்சுமணரும் தான் என்று உணர்ந்து மெய்சிலிர்த்துபோகிறார். பிறகு வேண்டியபடி அவர் ஜனகவல்லித்தாயார் சன்னதியை சீரமைத்துதருகிறார். அதற்கான ஆதாரங்கள் கோவிலில் இன்றும் இருக்கின்றன.
சென்னையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மதுராந்தகத்தில் மையத்தில் அமைந்திருக்கிறது கோயில். இக்கோயிலின் சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இத்தலம் ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் முக்தி அடைந்த தலம்.அதுமட்டுமா பெரும் புரட்சியாளரான ராமானுஜருக்கும் மதுராந்தகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
தீட்சைபெற பெரிய நம்பியை காண நடந்தே காஞ்சி விரைகிறார் ராமானுஜர். ராமானுஜரை காண காஞ்சியில் இருந்து வருகிறார் பெரிய நம்பி.இருவரும் சந்தித்துக்கொண்ட இடம் மதுராந்தகம். தீட்சை பெற தவித்துக்கொண்டிருந்த ராமானுஜர் கோதண்டராமர் கோவிலிலேயே தீட்சை பெற விழைந்தார். அவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும் வைஷ்ணவ தீட்சை அளித்தார் அவரது குருவான பெரிய நம்பி.
இங்கு கோதண்டராமராக வில்லேந்தி சீதை லட்சுமணர் சகிதமாக காட்சியளிக்கிறார் பெருமாள். சீதையின் கைத்தலம் பற்றியபடி ராமர் காட்சிதருகிறார்.
இதற்கும் ஒரு புராணம்இருக்கிறது.
விபண்டக மகரிஷி, கிளியாற்றின் கரையோரம் தவத்தில் இருக்கிறார். அப்போது வனவாசம் முடித்துவிட்டு புஷ்பக விமானத்தில் ராமரும், சீதையும் லட்சுமணரும் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். விபண்டக மகரிஷி தவமிருந்த இடத்தை கடக்கும்போது ஞானகிரி மலையால் விமானத்தின் பயணம் தடைபடுகிறது. அப்போதுசீதைக்கு விபண்டகரின் தவம் ஞாபகத்திற்கு வருகிறது. ராமருக்கு சீதை நினைவுபடுத்த, விபண்டகருக்கு தரிசனம் அளிக்க விமானத்தில் இருந்து இறங்கும்போது சீதையின் கரம் பற்றி இறங்க உதவுகிறார் ஸ்ரீராமர். அந்த கரிசனமும் அக்கறையும் கோயிலில் வெளிப்படுகிறது.இங்கு கோதண்டராமர் மூலவராக இருந்தாலும், ராம அவதாரத்தில் அவரே பூஜித்த கருணாகர பெருமாளுக்கு அனைத்து விதமான பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம்.
கருவறையில் சீதையின் கைத்தலம் தனது வலக்கரத்தால் பற்றியபடியும் மறுகரத்தில் வில்லேந்தியும் ராமர் நிற்க, அவருக்கு அருகில் லட்சுமணர் நிற்கிறார். விபண்டக முனிவரும், பெரியநம்பிகள் வழிபட்ட கிருஷ்ணரும் கருவறையில் சேவை சாதிக்கிறார்கள்.
கருவறைக்கு வெளியே உள்ள தூண்களை ஒட்டியபடி கீழே ஒரு சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இங்கிருந்து மதுராந்தகம் ஏரிக்கு செல்ல முடியும் என்கிறார்கள்.
கோயிலின் இடப்பக்கம் லயனல் பிளேஸ் சீரமைத்துத்தந்த ஜனகவல்லிதாயார் சன்னதி அமைந்துள்ளது. அன்னையை வழிபட்டு சுற்றிவந்தால் கண்ணெதிரே தெரியும் மண்டபம்தான் ஸ்ரீராமானுஜருக்கு வைணவ தீட்சை அளித்த மண்டபம். மண்டபத்தை தரிசித்துவிட்டு வந்தால் ஆண்டாள் சன்னதியை தரிசிக்கலாம். ஆண்டாளின் அருகில் பெரியநம்பிகள் சன்னதியை பார்க்கலாம்.ஆண்டாள் சன்னதி எதிர்புறம் ராமானுஜர், ஸ்ரீநரசிம்மமூர்த்தி சன்னதிகள் இருக்கின்றன.
ராமானுஜருக்கு தீக்ஷை அளிக்க பயன்படுத்திய கோல் போன்றவையும் இன்றும் பராமரிக்கப்படுகின்றன.
கோயிலின் எதிரில் ஸ்ரீராம பக்த அனுமன் சன்னதி அமைந்துள்ளது. அருகில் தீர்த்தக்குளம்.
ஆனித்தேரோட்டம் மிகுந்த விசேஷமான நிகழ்வு. தேரடியும் முக்கிய சாலையிலேயே அமைந்துள்ளது.
இன்றளவும் ஏரியை காத்துக்கொண்டு சீதை கைத்தலம் பற்றி காட்சி கொடுக்கும் ஸ்ரீராமரை வழிபட்டால், கணவன்-மனைவி உறவு பலப்படும் என்பதும், துன்பங்கள் வழிவிட்டு விலகும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு சென்றவர்களுக்கு விளங்கும்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளது ஏரிகாத்த ராமர் கோயில். ஊருக்குள் சென்றாலும், நகரின் மையமாக கோயில் கோபுரம் தென்படும். பைபாஸ் சாலையில் படிகளில் இறங்கிச்சென்றால் சில அடிகளிலேயே கோயில் தென்படும்.
ஒருமுறை வந்து வழிபட்டுப்பாருங்கள். பிறகு இந்த ஸ்ரீராமரின் கருணையையும் அன்பையும் உணர்வீர்கள்.
ஓம்நமோ நாராயணாய.
- எழுத்தாளர் பாமா
Leave a Comment