திருப்பதி திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம் .....


திருப்பதி திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வடக்கு மாடவீதியில் உள்ள ஆதிவராக சுவாமி கோவிலில் இன்று ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி ருத்விக் வதனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் பூஜை  நடைபெற்றது. 23 ஆம் தேதி யாகசாலையில் யாகங்கள் தொடங்கப்பட்டு  மூலவர் ஜீவ சக்தியை கும்பத்தில் கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. 25ஆம் தேதி மூலிகை கலவையை கொண்டு தயார் செய்யப்பட்ட அஷ்டபந்தனம் நடைபெற்றது. 26 ஆம் தேதியான நேற்று மகா சாந்தி யாகம் மற்றும் சிறப்பு மகா சாந்தி அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை 3 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு யாகம் பூர்ணாவுதியுடன்  நிறைவு பெற்றது. 

இதையடுத்து கும்பத்தில் உள்ள ஜீவ சக்தியை மீண்டும் மூலவருக்கு கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், தலைமை அர்ச்சகர் வேணுகோபால், ஆகம ஆலோசகர் சுந்தரவரத பட்டாச்சாரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இன்று இரவு வராக சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு வராக சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

வராக சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் காலை 11 மணி முதல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது ரத்து செய்யப்பட்டது. மேலும் இன்று நடைபெறவிருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ,வசந்த உற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டது.



Leave a Comment