மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்


மதுரை சித்திரைத் திருவிழாவின் 11-ம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர்.

சைவமும், வைணவமும் இணையும் வகையில் கொண்டாடப்படும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது என 15 நாட்கள் ஆண்டுதோறும் மதுரையில் இந்த விழாகளைகட்டி காணப்படும்.

இந்த நிலையில், இன்று 11-ம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலை 5.50 மணிக்கு மேஷ லக்னத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தேர்களில் எழுந்தருளினர். பிறகு 6.10-க்கு பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி, அம்மன் தேர்கள் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தன. 

தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய... என்ற பக்தி கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி- அம்மன் தேர்கள் வலம் வந்ததை காண ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை மற்றும் காளை வலம் வந்தன. இதனை கண்டு சிறுவர்-சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் ஆர்வத்துடன் வடங்களை பிடித்து தேர் இழுத்தனர். இந்த சித்திரை திருவிழாவால் மதுரை இன்று களைகட்டி காணப்பட்டது.

பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள நிலையை அடைந்ததும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமி-அம்மன் தேர்களுக்கு பின்னால் சண்டிகேஷ்வரர், பஞ்சமூர்த்திகள் சப்பரங்களில் வீதிஉலா வந்தனர்.
 



Leave a Comment