1,432 குழந்தைகளுக்கு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற குழந்தைகள் தூக்க நேர்ச்சை வழிபாட்டு துவங்கியது. 1432 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. நிகழாண்டு விழா கடந்த மார்ச் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையில் கணபதி ஹோமம், சமயச் சொற்பொழிவு, தூக்கக்காரர்களின் நமஸ்காரம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தூக்கக்காரர்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி பஞ்சகவ்ய முழுக்கல் செய்து, பூஜைக்குப் பின்னர் கோயிலை அடைந்து நமஸ்காரத்தில் ஈடுபடுவர். மாலை 6 மணிக்கு தூக்க நிகழ்வின் வெள்ளோட்டமான வண்டியோட்டம் நடைபெறும்.
திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று தொடங்கி உள்ளது. அதிகாலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். மாலை 6 மணி முதல் தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 1432 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. தூக்க நேர்ச்சை நிறைவடைந்த பின்னர், குருசி தர்ப்பணத்துடன் விழா நிறைவடையும்.
தூக்கத் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Leave a Comment