யுகாதிப் பண்டிகையின் பச்சடி உணர்த்தும் தத்துவம் !
ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம்தான், 'யுகாதி பண்டிகை'. இந்தப் பண்டிகை, 'உகாதி' என்றும் அழைக்கப்படுகிறது.பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
யுகத்தின் ஆரம்பம் இந்தநாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. `சைத்ர மாதத்தின் முதல் நாளான இன்றுதான் பிரம்மதேவர் யுகத்தைத் தொடங்கினார்’ என்று பிரம்ம புராணம் கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தருமபுரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் யுகாதிப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.
மராட்டிய மக்கள் 'குடிபாட்வா ' என்றும், சிந்தி இன மக்கள் 'சேதி சந்த்' என்றும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால், அது பச்சைப் பச்சடிதான். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள்.
வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். 'பேவு பெல்லா' என இதைக் கன்னட மொழியில் கூறுகிறார்கள்.
Leave a Comment