விஷூ பூஜைக்காக சபரிமலை நடை ஏப்ரல் 10 ஆம் தேதி திறப்பு
சித்திரை விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஏபரல் 10 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
கடந்த மார்ச் மாதம் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவையொட்டி 11-ம் தேதி நடை திறக்கப்பட்டது. ஆராட்டுக்கு பின் 21-ம் தேதி விழா நிறைவு பெற்று மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
11-ம் தேதி முதல் அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
15-ம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொ டர்ந்து பக்தர்களுக்கு விஷூ கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
Leave a Comment