திருப்பதி உண்டியல் காணிக்கையின் பயன்பாடுகள் என்ன என்று தெரியுமா?
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நாள் தோறும் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் செலுத்தும் காணிக்கை பல கோடி ரூபாய் ஏழுமலையான் உண்டியலில் நிறம்பி வழிகிறது. இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில் இதுதான். திருப்பதியில், ஶ்ரீவாரி உண்டியலும், லட்டு பிரசாதமும் பக்தர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தரும் உன்னதங்கள்.
திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, அசையா சொத்துக்கள், பொன்னாபரணங்கள், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணம், தினம்தோறும் நடைபெறும் திருமலை சேவா மூலம் கிடைக்கும் பணம், நேர்த்திக்கடனாக, காணிக்கையாகவென உண்டியலில் செலுத்தப்படும் பணம், லட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் என பலவகைகளிலும் வருமானம் வருகிறது. இந்த பணமெல்லாம் ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்பட்டு அதற்கேற்ப பல்வேறு நல்ல காரியங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது.
இவையாவும் திருமலை-திருப்பதி தேவஸ்தான கமிட்டி மற்றும் அறங்காவலர் குழுவினரின் மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்படுகின்றது. பிரதானக் கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு இருக்கும் வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், கோவிந்தராஜ ஸ்வாமி கோயில், சீனிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்த வருமானத்திலிருந்தே பராமரிக்கப்படுகின்றன.
இவை தவிர திருமலையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் வேறு பல கோயில்களுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது. திருமலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள், இலவச லாக்கர்கள், இலவச குளியலறைகள், இலவச கழிப்பறைகள் என பல்வேறு வசதிகள் தரமான முறையில் வழங்கப்படுகின்றது.
பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானம் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையைப் பெற்றதாகும்.
கடலைப்பருப்பு, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற விலை உயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இவை தவிர இலவச பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. ஸ்ரீவெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திர பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள், மலர்கள், செடிகொடிகள் மற்றும் பசுமை மிக்க மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடவுளின் கடைக்கண் பார்வை படுவதற்கு ஒரு பக்தர் செய்யக்கூடிய பல காரியங்களில், அன்னதானம் வழங்குவது மிக உயர்ந்த காரியமாகக் கருதப்படுகிறது. அன்னச் சத்திரங்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே நன்கொடைகள் மூலம் நடத்தப்பட்டு வந்ததாக, கோயில் வளாகத்துக்கு உள்ளேயும் வளாகத்தைச் சுற்றியும் இருக்கின்ற கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றளவும், அன்னதானத் திட்டத்தின் வாயிலாக, மேல்திருப்பதியில் தினமும் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. எல்லா நாட்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகின்ற இத்திட்டம், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகளால்தான் நடத்தப்படுகின்றது.
அன்னதானத் திட்டத்தை என்றென்றைக்கும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நன்கொடையாகக் கிடைக்கும் பணம் முழுவதையும் தேவஸ்தானம் தேசிய வங்கிகளில் முதலீடு செய்கிறது. அதிலிருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகின்றது.
Leave a Comment