திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் ஆறாம் தேதி யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவையுடன் தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி விஸ்வ சேனாதிபதியுடன் இணைந்து ஆனந்த நிலையத்தை கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வந்து தங்க கதவு அருகே கொலு வைக்கப்பட உள்ளது.
பின்னர் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் புதிய வருட பஞ்சாங்கத்தை கோவிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷித்தலு படித்து காண்பிக்க உள்ளார். யுகாதி ஆஸ்தானத்தை ஒட்டி ஏப்ரல் ஆறாம் தேதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மேலும் யுகாதியை ஒட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. ஏழுமலையான் கோவிலில் யுகாதி , ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரக் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வாறு ஏப்ரல் ஆறாம் தேதி யுகாதி தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு கோவில் முழுவதும் மூலவர் சன்னதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
இதை அடுத்து பச்சைக்கற்பூரம், குங்குமம், சந்தனம், மஞ்சள், உள்ளிட்ட மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கலவையை கோவில் சுவற்றில் தெளிக்கப்பட்டது. இதனை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுவது வழக்கம். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று சுத்தம் செய்யப்பட்டு மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதில் தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் மற்றும் ஜீயர்கள் பங்கேற்றனர். கோயில் ஆழ்வார் திருமஞ்னத்தை ஒட்டி அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.
Leave a Comment