நந்தியின் குறுக்கே போக கூடாது? ஏன் தெரியுமா?
சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும். சிவபெருமானின் வாகனமாக இருப்பது வெள்ளை நிறக்காளை. இதன் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன.
சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது. நந்தி என்றால் ‘மகிழ்ச்சி’ என்று பொருள். நான்கு மறைகளையும் நந்தியம் பெருமானுக்குத் தான், ஈசன் முதன் முதலில் கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது தர்மம் மட்டுமே. அந்த தர்மம் தான், இறைவனான சிவபெருமானைத் தாங்கி நிற்கிறது.
கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத் தான் ஈசன் சுவாசிக்கிறார். அதாகப்பட்டது.. தர்மம் தான் இறைவனின் சுவாசம்.
சிலாத முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
நந்தியம்பெருமானுக்கு ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன.
Leave a Comment