காரைக்கால் ஸ்ரீகைலாசநாத சுவாமி கோயில் தேரோட்டம் .......
காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று காலை கைலாசநாத சுவாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் இசைக்க , நாதஸ்வரம், மேள, தாள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. தேரினை அமைச்சர் கமலக்கண்ணன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன் உட்பட ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தேரானது தெருவில் ஆடி அசைந்து வந்த காட்சி பக்தர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பாரதியார் சாலை, கென்னடியார் வீதி, மாதா கோயில் ரோடு வழியாக சுற்றி வரும் தேர் இன்று மாலை மீண்டும் நிலையை வந்தடையும்.
அடுத்ததாக நாளை பங்குனி உத்திர தீர்த்தவாரியும், வரும் 24ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. இதையடுத்து கைலாசநாதசுவாமி கோயிலின் பங்குனி உத்திர திருவிழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Leave a Comment