தேர்தல்.... ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களின் சிபாரிசு ரத்து
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களின் சிபாரிசு கடிதங்களுக்கு அறை ஒதுக்கீடு, தரிசன டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர்கள் என்று மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசு கடிதங்களுக்கு அறைகள் மற்றும் விஐபி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே கோயிலில், முக்கிய பிரமுகர்களின் பதவியை கவுரவிக்கும் விதமாக, அவர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அறை ஒதுக்கீடு, தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தேர்தல் முடியும் வரை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் நேரடியாக வரும் விஐபிக்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏழுமலையான் கோயிலுக்கு முன் அரசியல் பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சிலர் தொடர்ந்து அரசியல் பேசி வந்தனர்.
தற்போது தேர்தல் விதிகள் உள்ளதால் கோயிலுக்கு வரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வாக்குறுதியை அளிப்பதோ, பேசுவதோ கூடாது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வழக்கம்போல் சிபாரிசு கடிதங்கள் எடுத்து வருபவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Leave a Comment