எம பயம் நீக்கும் சிவ மந்திரம் ....
சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.
சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
“ வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே “ என திருஞான சம்பந்தரும்,
“ கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே “ என திருநாவுக்கரசரும்,
“ நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும்
நா நமசிவாயவே” என சுந்தரரும் கூறியுள்ளனர்.
மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.
ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே
என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.
Leave a Comment