திருப்பதியில் 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதி கோயிலில் 16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது. தெப்ப உற்சவத்தை அடுத்து 16 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு மார்ச் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
தெப்ப உற்சவத்தையொட்டி தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் நாளான 16ம் தேதி இரவு 7 மணிக்கு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் சுவாமியும், இரண்டாவது நாளில் ருக்மணி சமேத கிருஷ்ணர் தெப்பலில் மூன்று சுற்றுகள் வலம் வர உள்ளனர். கடைசி மூன்று நாட்கள் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகின்றனர்.
இதில் மூன்றாவது நாள் மூன்று சுற்றுகளும், நான்காவது நாள் ஐந்து சுற்றுகளும், ஐந்தாவது நாள் ஏழு சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தெப்ப உற்சவத்தையொட்டி 16 மற்றும் 17ம் தேதி வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையும், 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் ஆர்ஜித சேவை, வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
Leave a Comment