சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மார்ச் 11-ஆம் தேதி திறப்பு
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மார்ச் 11-ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது.
சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் சித்திரை விஷூ, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் சபரி மலை கோவிலில் சிறப்புடன் நடைபெறும்.
இந்த ஆண்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
அன்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.
7.30 மணிக்கு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.
அப்போது சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசேஷ பூஜைகள் நடைபெறும். படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடத்தப்படும்.
13-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் ஸ்ரீபூதப்பலி, உற்சவபலி போன்றவை நடைபெறும். 20-ந்தேதி இரவு 10 மணிக்கு சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் 21-ந்தேதி காலை 11 மணி அளவில் பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட் டும் நடைபெறும். அன்று மாலை கொடி இறக்கப்படும். இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
Leave a Comment