சிம்ம வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் வலம்.....
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மராக கல்யாண வெங்கடேஸ்வரர் வலம் வந்தார்.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார்.
அதன்பின் மதியம் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி அர்ச்சகர்கள் நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 8 மணிக்கு வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தனது உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார்.
வாகனச் சேவையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சவமூர்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். வாகனச் சேவைக்கு முன் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டம் சார்பில் ஆடல், பாடல், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
Leave a Comment