சிவன்மலையில் தீர்த்தக் கலசம் .... கனமழையா? கடும் வறட்சியா?
சிவன்மலை முருகன் கோயில் ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பெட்டியில் தீர்த்தக் கலசம் வைக்க உத்தரவு வந்து இருக்கிறது.
சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் உத்தரவு பொருள் மாற்றப்பட்டுள்ளது. கண்ணாடிப் பேழையில் காவிரி தீர்தத்துடன் கலசம் வைக்க உத்தரவு வந்துள்ளது. கரூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கனவில் கடவுள் தோன்றி தீர்த்தக் கலசம் வைக்க உத்தரவு கொடுத்ததையடுத்து காவிரி தீர்தத்துடன் கலசம் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பின்னர் அந்தப் பொருள் கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
இந்தக் கண்ணாடிப் பேழைக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்பதை சிவன்மலை முருகனே பக்தர்களின் கனவில் வந்து உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது ஆண்டவன் உத்தரவு' என்று அழைக்கப்படுகிறது. இப்படி கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல் இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
கடைசியாக, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி 3 கதிர் அறுக்கும் அரிவாள்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்த அரிவாள்கள் புதன்கிழமை வரை கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற பக்தரின் கனவில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுவாமி சன்னதியில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் வைத்து உத்தரவு கேட்கப்பட்டது. இதில் வெள்ளை நிற பூ விழுந்ததை அடுத்து சிவன்மலை கோயிலில் காவிரி நீர் அடங்கிய தீர்த்தக் கலசம் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், கண்ணாடிப் பேழைக்குள் இந்த தீர்த்தக் கலசம் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தற்போது தீர்த்த கலசம் வைக்கப்பட்டுள்ளதால், கன மழை அல்லது கடும் வறட்சி ஏற்படுமா என்ற கேள்வி பக்தர்களின் மனதில் எழுந்து இருக்கிறது.
Leave a Comment