கடன் தீர கைதொழ வேண்டிய கோயில்


மும்மூர்த்திகளின் அம்சத்தோடு ஒரு பெருமாள் சிலையை பார்த்திருக்கிறீர்களா?

ஒரு பெரிய மருத்துவமனையாக செயல்பட்ட இடத்தின் மிச்சங்கள் முழுமையாக இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?

1100 ஆண்டுகளுக்கு முன் மருத்துவம், கலைகள், தொழில் என பலதுறைகளை கற்றுக்கொடுத்த இடம் இப்போதும் சென்னைக்கு அருகில் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

இத்தனைக்கும் ஒரே பதில் திருமுக்கூடல்.

வேகவதி, பாலாறு, செய்யாறு என மூன்று ஆறுகள் கூடும் இடம், இப்போது வறண்டு போய் வெறும் மணலாய் காட்சியளித்தாலும், அப்போது 3 ஆறுகளும் கட்டற்று பாய்ந்த இடம். ஒரு பக்கம் குதிரைப்படை, யானைப்படைகள் குளிக்க, இளைப்பாற இந்த முக்கூடல்தான் இடம் தந்திருக்கிறது. 

மிகச்சரியாக மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், நுழைவு கோபுரம் இல்லாமல், காட்சியளிக்கும் கோயிலில் வேங்கடேச பெருமாள் உறைகிறார். 

நுழைந்ததும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்த்தும் வகையில் மிகவும் தூய்மையாக அழகாக நந்தவனத்தோடு காட்சியளிக்கிறது.

வரதர், ஆண்டாள், தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். தாயார் அலமேலு மங்கையாக காட்சியளிக்கிறார். 

தலத்தின் நாயகனான வேங்கடேசப்பெருமாளைப் பார்க்கும் ஆவலுடன் எட்டி நடைபோட்டால், வடக்கு பார்த்த விதத்தில் நின்றவண்ணம் அருள்பாலிக்கிறார் எம்பெருமான்.

ஏன் இரு கண்களை மட்டும் படைத்திருக்கிறான் இறைவன். இன்னும் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல பேரழகாக எழுந்து நிற்கிறான் பெருமான். கண்கள் போதவில்லை, கொஞ்சம் விட்டால் நம்முடன் கிளம்பி வந்துவிடுவான் இந்த வேங்கடேச பெருமான். அப்படியொரு அன்பும், கருணையும் பொங்கி வழிகிறது இவனிடத்தில்.  

கருவறையில், திருப்பதி போலவே சங்கு, சக்கரம் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. சங்கு சக்கரம் இறைவனின் இடப்புறம் காட்சியளிக்கிறது. 

வேங்கடேசனின் வலப்புறம் மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி,  தாயார் காட்சியளிக்கிறார்கள். வழக்கமாக சயன கோலத்தில் இருக்கும் பெருமாளுடன் காட்சியளிக்கும் இவர்கள், நின்ற கோலத்தில் அருள்தரும் வேங்கடேசனுடன் இருக்கிறார்கள். 

அதற்கொரு காரணம் இருக்கிறது. பக்தனுக்காக எம்பெருமான் தனது தோற்றத்தையே மாற்றிக்கொண்ட நெகிழ்ச்சி தரும் புராணம். 

தொண்டைமான் மன்னன் திருப்பதிக்கு போக நினைக்கிறான். அதுவோ பகைவன் நாட்டை நெருங்கும் நேரம். பக்தனாக தவிக்கிறான் மன்னன். பக்தனுக்காக தவிக்கிறான் இறைவன். 

சங்கு சக்கரத்தை அனுப்பி பகைவனை விரட்டி பக்தனுக்கு அருள் பாலிக்கிறார். இறைவனின் அருளை எண்ணி மனம் உருகி, அப்பா என்றழைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறான் தொண்டைமான் மன்னன். அந்த அழைப்பின் ஒலி இன்றளவும் ஸ்ரீ அப்பன் வேங்கடேச பெருமாள் என்ற அழைப்பாக பக்தர்களிடத்தில் ஒலிக்கிறது. 

அப்படி பக்தனின் அனுக்கனாக உள்ள வேங்கடேச பெருமாள், தன்னை நோக்கி வரும் மன்னன் தொண்டைமானுக்காக சயன கோலத்தில் இருந்து அவசரமாக எழுந்து மன்னன் பார்க்க ஆசைப்பட்ட திருப்பதி பெருமாளின் நின்ற கோலத்தில் அருள் தருகிறார்.

மன்னனாக வந்ததற்காக மாறவில்லை. அன்பனாக, பக்தியுடன் பரிதவித்த ஒரு உயிருக்கு அருள்பாலிக்கும் வேகத்தில் எழுந்து நின்ற இறையின் தரிசனம். 

இப்பெருமானின் வலக்கரத்தில் பிரம்மனின் அம்சமாக தாமரை ஜொலிக்கிறது. சிவபெருமானின் ஜடா முடி கிரீடத்துடன் பெருமாளின் தலையை அலங்கரிக்கிறது. மும்மூர்த்திகளையும் ஒரேசேர தரிசிக்க இரண்டு கண்கள் போதாது என்று சொன்னது உண்மை என்று நீங்களும் உணர்வீர்கள்.. 

கோயிலில் உள்ள அனுமனுக்கு வடைமாலை சாத்தப்படுவதில்லை. தேன்குழல்தான் சாத்தப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்தவராக மெய்சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். வேங்கடேச பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள அனுமன் பக்தர்களின் கடன்பிரச்னைகளை தீர்த்து மனநிம்மதி தருவதாக ஐதீகம். அதனால், கண்குளிர கண்டு அனுமனின் அருள்பெற்று திரும்புகிறார்கள்.

இத்திருக்கோயிலில் பொங்கலையொட்டி நடக்கும் பரிவேட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. 

கோயிலின் கிழக்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டில் இங்கு சிறப்பான மருத்துவமனை ஒன்று செயல்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. 

தமிழிலும், கிரந்த எழுத்துகளிலும் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது.

பதினொன்றாம் நூற்றாண்டில் 15 பேர் ஒரேநேரத்தில் சிகிச்சை பெறும் வகையில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டிருக்கிறது. நோயுற்ற, காயமடைந்த படை வீரர்கள் மற்றும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், அவர்களுக்கான மருந்துகள், மருந்துகளை தயாரிக்கும் ஆதூர சாலைகள் என நேர்த்தியாக செயல்பட்ட மருத்துவமனை இருந்திருக்கிறது. 

கோயில் கல்வெட்டில் படி எடுக்கப்பட்டதன்படி எந்தெந்த நோய்க்கு என்ன மருந்து என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் நம் முன்னோர்களின் மருத்துவத்திறன் வியப்பை ஏற்படுத்துகிறது.

திருமுக்கூடல் கல்வெட்டானது ஆதூர சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் பட்டியல் மருந்து வகைகள் ஓராண்டுக்கு தேவையான அளவில் சேர்த்துவைக்கப்பட்டிருந்தன. அந்த மருந்துகள் மாத்திரைகள், பொடிகள் கரைசல்கள், திரவங்கள், லேகியங்கள் போன்றவையும் இருந்துள்ளன.

இக்கோயிலில் சுற்றுப்புறக்கூடங்களும், ஜனநாத மண்டபமும் ஹைஷ்ய மாதவன் தமயன் என்பவனாலும் கட்டப்பட்டுள்ளது. வேதங்கள், சாத்திரங்கள், இலக்கணம் மற்றும் மருத்துவம் போன்றவற்றை கற்றுக்கொடுக்கும் பள்ளியும், மாணவர்களுக்கான தங்கும் விடுதியும், மருத்துவ விடுதியும் ஜனநாத மண்டபத்தில் நிறுவப்பட்டிருந்தன. மருத்துவமனையையும், இம்மண்டபத்தையும் காவல் காத்த திருமுக்கூடல்பேரய்யன் என்பவனுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல்லும், ஒரு காசும் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது என்ற குறிப்பும் கல்வெட்டில் இருக்கிறது. 

கோயிலுக்கு செல்லும் வழி
செங்கல்பட்டில் இருந்து பழைய சீவரம் சென்றால், திருமுக்கூடலை தரிசித்து வேங்கடேசனை கைதொழலாம். சென்னையில் இருந்து ஏறக்குறைய 70 கிலோமீட்டர் தொலைவுதான். 
1100 ஆண்டுகளுக்கு முன் கல்விசாலை, மருத்துவமனை, படைகள் பரிபாலனம், என பண்பட்டு வாழ்ந்த மக்கள் இருந்த மண்ணை போற்றுவோம்.
வாவென்று கைநீட்டி அழைத்தால் மனதில் வந்து குடியேறி கலி தீர்க்கும் தெய்வத்தை தொழுவோம்.


ஓம் நமோ நாராயணாயா ! 

(இந்த கோயிலின் அறியவகை புகைப்படங்கள் கீழே உள்ள போட்டோ கேலரியில் காணலாம்)

- எழுத்தாளர் பாமா




Leave a Comment