குன்றின் மேல் குடி கொண்டுள்ள குமரன்....
குன்றின் மேல் குடி கொண்டுள்ள குமரன் கோயில்கள் அறுபடை வீடு என அழைக்கப்படுகிறது. பழனி மலையில் முருகன் தண்டாயுதபாணியாக காட்சி் தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முருகனை தரிசிக்க மலைக்குச் செல்ல இரு வழிகள் உள்ளன. யாணை பாதை மூலம் மலைக்கு எளிதாக ஏறமுடியும். நோ் பாதை எனப்படும் மற்றொரு பாதையை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்.
நாரதர் கொடுத்த ஞானப் பழத்தை பெறுவது யார் என்ற போட்டியில், தாய் தந்தையரை சுற்றினால் உலகத்தை சுற்றியதாக பொருள் எனக்கூறி பழத்தை விநாயகர் பெற்றுவிடுகிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த குமரன் அனைத்தையும் துறந்து, பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவர் நின்ற இடம் "பழம் நீ " என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
புராணங்களில் பழனிக்கு பல பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும், பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி என்றும் கூறப்படுகிறது. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானதாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன.
முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக இருக்குமாம். தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலை க்கு சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டு, பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
நவபாஷாண முருகன் சிலையை போகர் வடிவமைத்ததே மிக சுவாரசியமான தகவல். தன்னை நாடி வருவோர்க்கு போகர், நவபாஷாணத்தால் ஆன வில்லைகளை அளித்துவந்தார். அதிக வீரியம் உள்ளதால், அதை உண்டவர்கள் உயிரிழந்தனர். எனவே நவபாஷணத்தால் ஒரு சிலையை வடிவமைத்த போகர், அதன் மீது சந்தனத்தை பூசி, அந்த சந்தனத்தை வி்ல்லைகளாக்கி தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.
திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற முருகன் தலங்களில் பழனி ஒன்றாகும். தைப்பூசம் என்றாலே நினைவுக்கு வரும் பழனிக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கானனோர் பல்ேவறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக வருவது வழக்கம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பக்தர்கள் நேர்்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தைப்பூசம் தவிர, பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் விழாக்களும் பழனியில் பிரசித்தம்.
அறுபடை வீடுகளில் பழனி ஒன்று என்றாலும், பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோயிலே 3-வது வீடு என்று கூறுபவர்களும் உண்டு. இக்கோயிலே திரு ஆவினன்குடி ஆகும். வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவினன்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.
பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் மீண்டும் ஒரு கன்பிவட ஊர்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி போய்விட்டு வந்தால் எங்கே பஞ்சாமிர்தம் என்றுதான் அனைவரும் கேட்பார்கள். அந்த அளவுக்கு பழனி பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. மலை வாழைப்பழம், நாட்டுச் சர்்க்கரை, கற்கண்டு, பேரிச்சம் பழம் மற்றும் தேன் 9ஆகிய 5 பொருட்களும் சேர்ந்த கலவைதான் பஞ்சாமிர்தம். வாசனைக்காக இப்போது பஞ்சாமிர்தத்தில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் 5 லட்சம் ரூ பாய்க்கு விற்பனையாகும் பஞ்சாமிர்தம், விழாக்காலங்களில் 25 லட்சம் வரை விற்பனை ஆகிறது. நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தத்தை தயாரிக்க விஞ்ச் நிலையம் அருகே மையம் ஒன்று உள்ளது. கோயில் சார்பில் பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்ய மலை மேலும், அடிவாரத்திலும் கோயில் நிர்வாகம் சார்பில் தனி ஸ்டால்களும் உண்டு.
பழனி கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் கோசாலையில் வளர்க்கப்படும் பசுக்களின் சாணத்தில் இருந்து விபூதி தயாரிக்கப்படுகிறது. தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்வித்து வழங்கப்படும் விபூதியை பிரசாதமாக மட்டுமின்றி, வீட்டு உபயோகத்துக்கும் வாங்கிச் செல்கிறார்கள்.
Leave a Comment