சூரிய பகவான் வழிபட்ட தலம்....
சூரிய பகவான் வழிபட்ட தலங்களை பஞ்ச பாஸ்கரத் தலங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். திருவாரூர் - தலைஞாயிறு, நீடாமங்கலம் - திருப்பரிதி நியமம், ஆடுதுறை - திருமங்கலக்குடி, நன்னிலம் - திருச்சிறுகுடி மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள ஞாயிறு ஆகியவை தான் அவை. சாபம் நீங்க சிவனாரை வழிப்பட்ட தலங்கள் தான் இவை.
ஒருமுறை பிரம்மாவின் சாபத்தால் தொழுநோய் கண்டு சூரிய பகவான் அவதிப் பட்டார். அப்போது சாப விமோசனம் பெறுவதற்கு சிவ பெருமானை எண்ணி சூரிய பகவான் தவம் செய்தார்.
அப்போது 'தாமரை மலர்கள் பூத்திருக்கும் தடாகத்தில் நீராடி, அங்கே தாமரைப் பூவில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளும் சிவனாரை வழிபட சாபம் நீங்கும் என்று அசரீரி ஒலித்தது.
அசரீரி ஒலியை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சூரியனார், அசரீரி சொல்லியபடி, ஞாயிறு தலத்துக்கு வந்து தடாகத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார். அப்போது, தாமரையில் இருந்து தோன்றிய சிவனார், இவருடைய சாபத்தை நீக்கி அருளினார்.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ளது இந்த ஞாயிறு திருத்தலம். சூரிய பகவான் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊருக்கு ஞாயிறு என்றும், மலரில் வெளிப்பட்டவர் ஆதலால் இறைவனுக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் என்றும் திருப்பெயர் அமைந்ததாகச் தல புராணம் சொல்கிறது!
சோழ மன்னன் ஒருவன், ஒருமுறை இந்த வழியே வந்த போது, அருகில் உள்ள பகுதியில் சிலகாலம் தங்கினானாம் . அருகில் உள்ள வனத்துக்கு வந்த மன்னன், தாமரை தடாகத்தைக் கண்டு பரவசம் அடைந்தான். சிவ பூஜைக்காக பூக்களைப் பறித்தான். அப்போது ஒரு பூ மட்டும் விலகி விலகிச் சென்றதாம்! பல முறை முயன்றும் அந்தப் பூவைத் தொடக்கூட முடியாததால் ஆத்திரம் கொண்ட மன்னன், கத்தியை எடுத்து மலரை வெட்டினான். அந்தப் பூவில் இருந்து ரத்தம் பீறிட்டது; தடாகம் முழுவதும் ரத்தம் பரவியது. அதிர்ந்த மன்னன், மயங்கிச் சரிந்தான்.
பிறகு மயக்கம் தெளிந்த போது, தனது கண்கள் பார்வையை இழந்து விட்டதை அறிந்து கதறி அழுதான்! தனது தவறை எண்ணி வருந்தியவன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்ட... அந்த நிமிடமே அவன் முன்னே காட்சி தந்த சிவ பெருமான், 'இங்கே... இந்தத் தலத்தில், சூரியன் வந்து வழிபடும் வகையில் ஆலயம் ஒன்றை எழுப்பு!' என்று அருளினார்.
அதன்படி, சிவாலயம் ஒன்றை எழுப்பிய மன்னன், ஸ்வாமிக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி, வணங்கினான். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசொர்ணாம்பிகை; சுவாமியின் வலது புறத்தில் சந்நிதி கொண்டிருக்கிறாள். ஆகவே திருமண பாக்கியம் அருளும் தலம் என்கின்றனர்!
வருடந்தோறும், சித்திரை மாதம் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள், சிவனார் மற்றும் அம்பாள் சந்நிதியில் விழுகின்றன. இந்த நாளில், இறைவனை தரிசிப்பது பெரும்பலன் தரும் என்பது ஐதீகம்.
Leave a Comment