தோஷங்கள் நிவர்த்தி செய்யும் பெருமாள் 


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்.  108 திவ்ய தேசங்களில் 53வது தலமாக உள்ளது இந்த கோயில். 

நடுநாட்டு திருப்பதிகளில் 2வது தலமாகவும், பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில் 4வது தலமாகவும், தமிழ்வேதம் எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் அவதரித்த தலமாகவும் விளங்குகிறது உலகளந்த பெருமாள் கோவில். 

சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் பல்லவர்கள், விஜயநகரபேரரசு, இரண்டாவது நரசிம்மவர்மன், பாண்டியர்கள், திருமலைநாயக்கர், திருமங்கை மன்னன், மலையமான் சக்கரவர்த்தி ஆகியோர் படிப்படியாக இக்கோவிலை நிறுவினார்கள். 

இந்த திருக்கோயிலில் திருக்கோலத்தில் வலது கை யில் சங்கும், இடது கையில் சக்கரத்தையும் பிடித்தபடி வலது காலை ஆகாயம் நோக்கி தூக்கி நின்று திருவிக்கிரம அவதாரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

வலது காலின் மேல்புறம் லட்சுமி உள்ளார், கீழே இடது காலில் நமச்சு முனிவர், மகாபலி சக்கரவர்த்தி, சுக்கிராச்சாரியார். ஆண்டாள், கருடன் ஆகியோர் பூஜை செய்கின்றனர். முதலாழ்வார்களான பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடல் பாடுகின்றனர். கோவிலில் கருவறையில் இந்த காட்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். 

உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவர் தேகளீச பெருமாள் ஆவார். ஒரு காலத்தில் வேணுகோபால சன்னதியாக இருந்து படிப்படியாக உலகளந்த பெருமாள் கோவிலாக மாற்றம் கண்டது. திருவிக்ரமசுவாமி சன்னதிக்கு பின்புறம் வாமனருக்கு தனி சன்னதி உண்டு. 

இங்குள்ள வாமனர் கையில் குடையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கேரளாவிற்கு அடுத்த படியாக வாமனருக்கு இங்கு தான் சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி பிரம்மேற்சவமும், வேணுகோபாலஜெயந்தி உற்சவமும் நடைபெறுகிறது. உற்சவர்கள் புஷ்பவள்ளி தாயார் மற்றும் தேகளீச பெருமாள் ஆவர். சன்னதிக்கு செல்வதற்கு முன்பு கொடிமரத்தில் இருந்து இடதுபுறத்தில் உள்ளது பூங்கோவல் நாச்சியார் சன்னதி உள்ளது. 

தென்பெண்ணை ஆற்றின் வலதுபுறத்தில் உள்ள இந்த தலத்திற்கு அடிக்கடி பேருந்து வசதியும், விழுப்புரம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரே கோவிலுக்குள் அடங்கி இருப்பதால் திருக்கோவிலூர் என்று அழைக்கப்பட்டது. 
 



Leave a Comment