கடவுளிடம் நினைத்த வரத்தை பெறுவது எப்படி?


ஆழ்ந்த பக்தியுடையவர்கள் படைத்த கடவுளையும் கட்டிப்போடலாம். வரம் கேட்கலாம். அந்த வரங்களைக் கேட்குமுன் எவற்றையெல்லாம் சிந்தித்து கேட்கவேண்டும் என்பதை மகாபாரதம் விளக்குகிறது.

மகாபாரதத்தில் கௌரவர்களுடன் விளையாடிய சூதாட்டத்தில் தோற்றதால் பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் கழிக்க நேர்ந்தது.

இது முடிந்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பாண்டவர்கள் திரும்பப்பெற விரும்பினார்கள். ஆனால் அதைத் தருவதற்கு துரியோதனன் விரும்பவில்லை. இதனால் பஞ்ச பாண்டவர்களில் பீமனும் அர்ஜுனனும் கடும் கோபம் கொண்டனர். கௌரவர்களிடம் போரிட விரும்பினர்.

ஆனால் உறவையும் நட்பையும் அமைதியையும் பெரிதும் விரும்பியவன் தர்மன். தங்களது கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துச் சொல்லி தங்களுக்குச் சேரவேண்டிய ராஜ்ஜிய பாகத்தைப் பெறுவதற்கு பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை தூதுவனாக அனுப்ப விரும்பினான்.  அப்போது அவன் மனக்கண்ணில் தோன்றியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன். எனவே, ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்து இப்படிச் சொன்னான்: 

''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லையென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி போர் வராமல் தடுத்து தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

''தர்மா! நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீங்கள் கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி புறப்பட்டான் கண்ணன்.

பீமனை கண்ணன் சந்தித்து இதுபற்றி பேசியபோது, "ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் நான் செய்த சபதம் நிறைவேற போர் வந்தே ஆக வேண்டும்" என அவன் கர்ஜித்தான். அதேகருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

''அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் சகாதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன்'' என்றுவிட்டு கண்ணன் கிளம்பினான்.

சகாதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன். அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த சகாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து வரவேற்றான்.

''சகாதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ணன். 

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் சகாதேவன்.
 



Leave a Comment