கந்தனுக்கு எத்தனை எத்தனை காவடிகள்!


தை மாதம் பூச நட்சத்திரம் பௌர்ணமி நாளில் பார்வதி முருகப் பெருமானுக்கு வேல் தந்து அருளிய நாளையே தைப்பூசத் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். பழநியில், தைப்பூசம் பத்து நாட்கள் திருவிழாவாக பல்வேறு சமூகத்தவரும் கலந்து கொண்டாடும், சமத்துவத் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. பழநிக்கு பாதயாத்திரையாக காவடி சுமந்து முருக பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் லட்சக்கணக்கில் குவிவது வழக்கம். பழநிக்கும் காவடிக்கும் நெருங்கின சொந்தம் உண்டு. இங்கே, பழநியில் மலைக்கோயில், இடும்பன் கோயில் என இரு மலைகளுமே காவடிகளாகவே காட்சியளிக்கின்றன. 

முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததே காவடிதான். இதில்தான் எத்தனை வகை! பால்காவடி, பழக்காவடி, பூக்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, கரும்பு, தீர்த்த காவடி என எத்தனையோ! மலைக்கோயில் நவபாஷாண சிலை வடிவான முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர், பால், எண்ணெய், தேன், பழம், விபூதி, சந்தனம், பூ என அனைத்தும் காவடி உருவில்தான் மலைக்குச் செல்கின்றன. 
 
பக்தர்கள் பரவசத்துடன் காவடி எடுத்து ஆடுவதைக் கண்டால் உடல் சிலிர்த்துப் போகும். வணிகத்தில் வருமானம் ஈட்டிய நகரத்தார் தம் பொருளை பெரும் தானமாக பழநி முருகனுக்கு வழங்கிடவே தைப்பூசத்தில் பாதயாத்திரையாக காவடி சுமந்து வர ஆரம்பித்தனர். இதுவே மிகப் பிரபலமாகி தைப்பூச பாத யாத்திரையாக பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டிற்கொரு மயில் தீர்த்தக் காவடி என கடும் விரதமிருந்து, சுமந்து நடைப்பயணமாக பழநி நோக்கி செல்கிறார்கள். வரும் வழியெல்லாம் அன்னதானம், தர்மமென அவர்களுக்கு பண்போடு பக்தி தொண்டு செய்கின்றனர் அந்தந்த ஊர்க்காரர்கள். 

திரும்பவும் ஊர்சேரும் வரை காவடிகளுக்கு அவர்கள்  காட்டும் பாதுகாப்பு மிகத் தெய்வீகமானது. கொங்கு மண்ணின் மக்கள் காவிரி தீர்த்த காவடியை கடும் வெயிலையும் பாராமல் சுமந்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். தங்கள் மண்ணில் விளையும் பொருட்கள் எல்லாம் எங்கள் குலதெய்வம் மேற்கு நோக்கிய பகவான் முருகனுக்கே என கேரள மக்களும் காவடி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். காவடி தூக்கி வரும் பாலர் முதல் முதியோர் வரை படியேறி மலைக்கோயில் செல்வது பார்க்க அழகாக இருக்கும். 

பழநியில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் லட்சக்கணக்கில் படைக்கப்படும் காவடிகள் குவிந்துவிடும். இன்றும் முருக பக்தர்கள் இல்லத்திலும் பரம்பரை சொத்தாக  பழம்பெரும் காவடிகள் பத்திரமாக இருப்பதைக் காணலாம். எடப்பாடி பருவத ராஜகுல சமூகத்தினர் முருகப் பெருமானை தம் குலச் செல்வி வள்ளியை மணமுடித்ததால் மாப்பிள்ளை என்ற குடும்பப் பாசத் துடன் குமரனின் பாதணியை தம் தலையில் இரு முடியாக சுமந்து 300 கி.மீ. தூரம் நடந்தே பழநிக்கு சென்று வருகின்றனர்.


 



Leave a Comment