திருவாபரண பெட்டியில் இருக்கும் ஆபாரணங்கள்....
பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தள ராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.
திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் போது பார்த்திருப்போம்... மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது.
1. திருவாபரணப் பெட்டி
2. வெள்ளிப் பெட்டி
3. கொடிப் பெட்டி
இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.
திருவாபரணப் பெட்டி - பெட்டி 1
ஐயப்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளன.
- திருமுகம் - (சாஸ்தாவின் முகக் கவசம்)
- (மீசையுடன் ராஜ கோலத்தில் காணப்படும் முகம்)
- ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி-திருவாச்சி)
- வலிய சுரிகை (பெரிய கத்தி)
- செறிய சுரிகை (சிறிய கத்தி)
- யானை - யானை விக்ரஹம் 2
- கடுவாய் - புலி விக்ரஹம் 1
- வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு
- பூர்ணா - புஷ்கலா (நிற்கும் கோலத்தில் தேவியர் உருவம்)
- பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)
- நவரத்தின மோதிரம்
- சரப்பளி மாலை
- வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
- மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
- எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)
வெள்ளி பெட்டி (பெட்டி 2)
வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்,
தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.
இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்.
கொடிப்பெட்டி (பெட்டி 3)
மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில்,
யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் உள்ளன.
கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.
இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல.
திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.
வானில் மாமலை மேலே மகர நக்ஷத்ரம் உதித்து நிற்க, கொடிமரத்தை கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்கள் சந்நிதானத்துக்குள் சென்று, ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் அந்த நொடி, பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிய ... மனம், உடல், இடம், காலம் என அனைத்தும் மறக்கும் பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.
Leave a Comment