சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா .... 13 அம் தேதி கொடியேற்றம் 


சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச தேர்த் திருவிழா 12 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா ஜனவரி 13 ஆம் தேதி காலை 7 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணி, 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

15 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியும், 16 ஆம் தேதி காலை, பகல், இரவு மண்டபக் கட்டளை நிகழ்ச்சியும், 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி மயில் வாகனக் காட்சியும், 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனக் காட்சியும், 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக் காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக் காட்சியும் நடைபெறுகிறது. 


20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி 21 ஆம் தேதி  நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 

தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று காலை 9 முதல் கைலாசநாதர் கோயிலில், வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறும். அப்போது, நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் திருவீதி உலா காட்சி நடைபெறும். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். 26 ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகிறது. 
 



Leave a Comment