கன்னியாகுமரி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஜனவரி 27 கும்பாபிஷேகம் 


கன்னியாகுமரியில் ரூ 2.50 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி  நடைபெற உள்ளதாக செயல் அலுவலர் அனில்குமார்  சிங்கால் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் இருந்து குறைகள் , ஆலோசனைகள், கருத்துக்களை கேட்கக்கூடிய டயல் யுவர் இ.ஓ. நிகழ்ச்சி இன்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் இந்த மாதம் ஜனவரி 8 மற்றும் 22ம் தேதிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்தில் இரண்டு நாட்களுக்கு 8 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

 9 மற்றும் 23ம் தேதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர்களுடன் சுபதம் நுழைவாயில் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த மாதம் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் 2.50 கோடி ரூபாயில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடேஷ்வர சுவாமி  கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மார்ச் 13-ஆம் தேதி ஐதராபாத்தில் மாதிரி கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்  உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் 100 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பதி  மற்றும் அதனை சுற்றியுள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ,அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்  சுவாமி கோவிலில் நடைபெறும்  ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பக்தர்கள் பெரும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. 

ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சேவை செய்யக்கூடிய ஸ்ரீவாரி சேவா தன்னார்வத் தொண்டர்களுக்கு குலுக்கல் முறையில் அவர்கள் சேவை புரிவதற்கான பணி இடம்    தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்படுகிறது. வம்ச பாரம்பரிய அர்ச்சகர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இருவேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது அவற்றை கருத்தில்  வைத்துக்கொண்டு விரைவில் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். ஏழுமலையான் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் 280 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வரும் ஆறு மாதங்களில் மேலும் 1100 சிசிடிவி கேமராக்கள் பெருத்தப்பட்டு  கண்காணிப்பு கேமராவின் கீழ் கோயில் மற்றும் நான்கு மாட வீதி  கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.
 



Leave a Comment