எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்க வல்ல பிரதோஷம்!


இன்று குருவாரப் பிரதோஷம். ஈசனை வழிபட மானிடர்களுக்கு குறிக்கப்பட்ட காலமே இந்த பிரதோஷ காலம். 

ஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம் ,பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. 

பிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள் ,காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல்,மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும்.

சிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும். தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!



Leave a Comment