சமயபுரம் மாரியம்மன் கோவில் ஜன-12 தைப்பூசத் திருவிழா
சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
12-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல் வருகிற 20-ந் தேதி வரை மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு, இரவு 11 மணிக்கு வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.
21-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன், தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடக்கிறது. இரவு 10 மணி முதல் 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 22-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காலை 6 மணிக்கு வட காவேரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதியுலா சென்று, அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.
Leave a Comment