ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது.
நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.
நம்மாழ்வார் பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் வெள்ளை உடை உடுத்தி பன்னிருநாமமும், துளசி மாலையும் தரிசித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர்.
பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை உச்சரித்தவாறு நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.
பின்னர் நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை காண்பித்து நம்மாழ்வார் மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.
அதன் பின் காலை 8 மணிமுதல் 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். இதனை தொடர்ந்து நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று(29-ந்தேதி) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதன்பின் அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றமறை நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.
Leave a Comment