நவக்கிரக தோஷ நிவர்த்தியாக்கும் உக்கிர நரசிம்மர் .....


சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்.

வசிஷ்டர் தவம் இருந்த இடம் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரேநாள் நரசிம்மர் வழிபாட்டில் மூன்றாவதாக நிறைவாக செல்ல வேண்டிய ஆலயமாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் இத்தலம் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது.

புராண காலத்தில் கிருஷ்ணா ரண்யசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கிரிகுடி கோவிலில் சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா, மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் கருட சேவை மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

வசிஷ்டர் சிங்கிரிக் குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது.

இக்கோவில் நரசிம்ம அனுஷ்டுப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதை சிறப்பாகச் சொல்கிறார்கள். இங்கு வைகானச ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறுகின்றன. மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.

இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் தாங்கியுள்ள ஆயுதங்கள்: 1. பாதஹஸ்தம், 2. பிரயோக சக்கரம், 3. ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4. காணம், 5. அரக்கனின் தலை அறுத்தல், 6. கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7. இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8. இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9. இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10. சங்கம், 11. வில், 12. கதை, 13. கேடயம், 14. வெட்டப்பட்ட தலை, 15. இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16. இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும். இது ஒரு பரிகாரத் தலம். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது.

புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.



Leave a Comment