கேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்


நம்முடைய கலாச்சாரத்தில் பலவிதமான பிரார்த்தனைகள் , நேர்த்திக்கடன்கள். அவரவர் மன நிம்மதிக்காகவும் , கவலைகளை தீர்க்கும் பொருட்டும் கடவுளிடம் வேண்டிக்கொண்டு செலுத்தும் நேர்த்திக்கடன்கள் அநேகம்.அது அம்மனை நினைத்து  பூக்குழியாக பாவித்து இறங்கும் தீக்குழியாக இருக்கட்டும், சிறு துரும்பு குத்தினாலும் தங்களது உடலெங்கும் அலகு குத்திக்கொள்வதில் ஆகட்டும் ,இது தான்.இப்படித்தான் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்ற அளவுகோல் இல்லை.

தென்னம்பாக்கம் அழகுமுத்தையனார் ஆலயமும் வித்தியாசமான நேர்த்திக்கடனால் தனித்து நிற்கிறது. ஸ்ரீ அழகர் சித்தரின் சக்திவாய்ந்த ஜீவசமாதி உள்ள இந்தக் கோவிலில் ,பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி கோவிலில் கட்டுகிறார்கள்.வேண்டுதல் நிறைவேறியதும்,விதவிதமான பொம்மைகளை வாங்கி கோவிலுக்கு கொடுக்கிறார்கள்.

கடலூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர்  துரத்தில்  அமைந்துள்ளது தென்னம்பாக்கம் . அங்கு ஏரிக்கரையின் வடகரையில், ஊருக்கு வெளியே இலுப்பைத் தோப்பில் பூரணி, பொற்கலை சகிதமாக கம்பீரமாக ஊர்க்காவலராக நிற்கும் அழகு முத்தையனார் கோவிலின் பின்புறமுள்ள கிணற்றில் ஜீவசமாதியடைந்து இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்  அழகர் சித்தர்.

சுமார் 200 ஆண்டுகளுக்குமுன் தென்னம்பாக்கம் வந்த சித்தர், தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தது அழகு முத்தையனார் கோவில் வளாகத்தைத்தான். இவர் ஊர்மக்களின் குறைகள் பல தீர்த்து, அற்புத சித்துகள் செய்துகாட்டியவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் மனதில் நிலைத்த சித்தர்,ஒருநாள் முத்தையனார் கோவிலுக்குப் பின்புறம்  இருந்த கிணற்றில் இறங்கினார். சித்தர்  கிணற்றில் இறங்குவதை கண்ட  அவ்வூர் மக்கள் ,அருகில் சென்று பார்க்கையில் ,கிணற்று நீரில் ஜீவசமாதியான நிலையில் சித்தர் இருப்பதைப் பார்த்தனர். தகவலறிந்து ஊரே திரண்டுவிட்ட நிலையில், சித்தரின் குரல் “நான் இங்கு ஜீவசமாதியாகிவிட்டேன். கிணறை மூடிவிடுங்கள். முத்தையனாரோடு எனக்கும் கோவில் அமைத்து வழிபடுங்கள். என்னை நாடிவரும் பக்தர்களின் குறையெல்லாம் தீர்த்து, வாழ்வை வளம்பெறச் செய்வேன்” என்று அசரீரியாக ஒலித்தது.

அவர் வாக்குப்படி, கிணற்றை மூடி சமாதி அமைத்து கோவிலாக்கினர் ஊர் மக்கள். சமாதி மீது சூரிய ஒளியும்ஆகாயமும்  தெரியவேண்டுமென்பது சித்தரின் கட்டளை என்பதால் ,அதற்காக சமாதியின் மேற்கூரையின் மையப்பகுதியை  திறந்தே வைத்திருக்கிறார்கள்.

ஆலயம் வரும் பக்தர்கள் முதலில் அழகு முத்தையனாரையும், பின்பு அழகர் சித்தரையும் வணங்கியபின்பே மற்ற தெய்வங்களான  சிவன் சந்நிதி, சனி பகவான் சந்நிதியோடு, அம்மன் சந்நிதியை வணங்குகின்றனர்.

கோவில் வளாகமெங்கும் நேர்த்திக் கடன் செய்துகொண்டவர்கள் வழங்கிய ஒரு அடி முதல் ஐந்தடி வரையிலான மனித சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

தங்களின்  பிள்ளைகள்  டாக்டராக, வக்கீலாக  கலெக்டராக வர வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் ,இந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டு  சீட்டெழுதிக் கட்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் தங்களின் பிள்ளைகள் போல் சிற்பம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் என்கிறார் தலைமை பூசாரி.

படிப்பு, திருமணம், குழந்தைப்பேறு , தீராத நோய்கள், வழக்கில் வெற்றி என சாதாரண மக்களின் வாழ்க்கையோடு பிணைந்துள்ள பிரச்சினை ஒவ்வொன்றுக்கும் இங்குவந்து முறையிட்டு தீர்வு காண்கின்றனர் சுற்றுவட்டார மக்கள். ஒவ்வொரு சிலையும் ,இது கதையல்ல நிஜம் என்று சொல்லாமல் சொல்கிறது.

அழகர் சித்தர் சித்திரை மாதமொன்றின் முதல் திங்கட்கிழமை ஜீவசமாதியடைந்தார் என்பதால் வருடம்தோறும் சித்திரை முதல் திங்கட்கிழமையை இங்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அழகருக்கு உகந்த திங்கட்கிழமையில் பக்தர்கள் திரளாக வந்து அவர் ஆசி பெற்று செல்கின்றனர்.

                                                               

 

கோவில் வளாகத்திலேயே  பக்தர்கள் விருப்பம் போல் உயரத்திலும் உருவத்திலும் சிலைகளை செய்து தருபவர்களும் காணப்படுகிறார்கள். கூப்பியக் கரங்களுடன் சிலநூறு மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் சிலைகளைப் பார்க்கும் போதே  சித்தரின் மகிமையை நம்மால் உணர முடிகிறது.

 

                                                                 

 

சித்தர் வழிபாடு நம் வாழ்வை இனிதாக்கும் .....



Leave a Comment