ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருப்பாவைத் திருவிழா


ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

அதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது. அதன் பிறகு காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவை.

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். எப்படி இந்த நோன்பு ஆரம்பித்தது? ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது.

கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை'யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.



Leave a Comment