மாதங்களில் நான் மார்கழி...
மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.
'மார்கழி' என்னும் பெயருக்கு என்ன பொருள்? 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.
மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.
மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.
தமிழ் மாதமாகிய மார்கழி பிறந்துவிட்டாலே நமக்கு நினைவு வருவது, ஆருத்ரா தரிசனமும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் தான். எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து, திருப்பாவை நோன்பு ஏற்றாள்.
Leave a Comment